எதிர்வரும் இலையுதிர்காலத்திற்குள் அல்லது குளிர்கால ஆரம்பத்திற்குள், மிகவும் மோசமான இரண்டாவது கொரோனாத் தொற்றலை பிரான்சைத் தாக்கும் என பிரான்ஸ் அரசாங்கத்திற்கு கொவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளிற்கான ஆலோசனைகள் வழங்கும் விஞ்ஞான ஆலோசனைக் குழு எச்சரித்துள்ளது.
விஞ்ஞான ஆலோசனைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மிகவும் பலவீனமான நிலையில் இருக்கும் கொரோனாத் தொற்றின் கட்டுப்பாடு எக்கணமும் மீறப்பட்டு, நிலைமை தலைகீழமாக மாறலாம். கொரோனாத் தொற்றானது கட்டுப்பாட்டை மீறி எக்கணமும் பிரான்ஸில் மிக மோசமாகப் பரவலாம்.
மிக முக்கியமான, பாதுகாப்பு இடைவெளிகள் பேணப்படாமல் போனால், மிகவும் ஆபத்தான நிலைமை தோன்றலாம். கொரோனாத் தொற்றைக் குறுகிய காலத்தில் அழிப்பதும், மிகவும் மோசமாகப் பரவச் செய்வதும் மக்களின் கைகளிலேயே உள்ளது. இதனை அரசாங்கம் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தவேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பிரான்ஸில், உணவகங்களிலும், பல்பொருள் அங்காடிகளிலும், விடுமுறை இடங்களிலும், கடற்கரைகளிலும், மக்கள் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி, பாதுகாப்பு இடைவெளிகள் எதுவுமின்றியே நடந்து கொள்கின்றனர் இந்த பின்னணியிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் பெரும்பாலான நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது!
பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், அங்கு பெரும்பாலான நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பரிஸின் சில புறநகரங்கள், லில், நீஸ், நீம் போன்ற பல பெரும் நகரங்கள் உட்பட பல இடங்களில் முகக்கவசம் அணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதிகளில், கடற்கரைகளில், சந்தைகளில், பூங்காக்களில் என, மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இல்து பிரான்ஸில் எர்பிளே, சார்ச்ல் போன்ற நகரங்களும் முகக்கவசம் அணிவதனை நடைமுறைப்படுத்தி உள்ளன.
மாநகரசபை ஆணை மூலமோ, அல்லது, மாவட்ட ஆணயத்தின் ஆணை மூலமாகவோ, இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இது தேசிய அளவில் முகக்கவசம் அணிவது கட்டாயச் சட்டமாகக் கொண்ட வரப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.