இத்தாலியில் அக்டோபர் 15-ந் தேதி வரை அவசரநிலை நீட்டிப்பு: பிரதமர் கியூசெப் கோண்டே அறிவிப்பு
30 Jul,2020
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலியும் ஒன்று.
கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி முதலிடத்தில் இருந்தது.
கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதன் முதலில் இத்தாலி தான் அமல்படுத்தியது. அத்துடன் அந்த நாட்டில் தேசிய அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் இத்தாலி கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தது.
அதனைத் தொடர்ந்து அங்கு 2 மாதங்களாக அமலில் இருந்த ஊரடங்கு கடந்த மே மாதம் முடிவுக்கு வந்தது. எனினும் தேசிய அவசர நிலை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி இத்தாலியில் நாளை (வெள்ளிக்கிழமை) அவசரநிலை முடிவுக்கு வர இருந்த நிலையில், அதை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை நீட்டித்து பிரதமர் கியூசெப் கோண்டே உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “தொற்று நோயின் வீரியம் மற்றும் தேசிய சுகாதார சேவையில் அதன் தாக்கம் கணிசமாக குறைந்து விட்டாலும், வைரஸ் நம் நாட்டில் தொடர்ந்து பரவுகிறது என்று தரவுகள் கூறுகின்றன. எனவே தேசிய அவசர நிலையை நீட்டிப்பது அவசியமாகிறது. இது குறிப்பிட்ட பயணக் கட்டுப்பாடுகள், சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதற்கான தேவைகளையும் உள்ளடக்கியதாகும்” என அவர் கூறினார்