அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு
24 Jul,2020
ஹூஸ்டனில் செயல்பட்டும் சீன துாதரகத்தை மூட, அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக, செங்டுவில் செயல்படும் அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டுள்ளது.
'கொரோனா' வைரஸ் முதலில் பரவத் துவங்கிய நாடான சீனா மீது, அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. வைரஸ் மூலம், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு, சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக, அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையே, உய்கர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு, சீன அதிகாரிகளை தண்டிக்கும் வகையில், அமெரிக்காவில் ஒரு சட்டத்தை, அதிபர் டிரம்ப் கொண்டு வந்தார்.இது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில், பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர், டெக்சாசில் உள்ள மருத்துவம் உள்ளிட்ட ஆராய்ச்சி முடிவுகளை திருட சீன உளவாளிகள் முயற்சி செய்வதாக கூறி, ஹூஸ்டனில் இயங்கி வரும் சீன துாதரகத்தை மூட, அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திரும்ப பெறாவிட்டால், பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள செங்டுவில் செங்குடுவில் உள்ள தூதரகத்தை உடனடியாக மூடும்படி அந்நாட்டு வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்காவின் அநீதியற்ற நடவடிக்கைக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சீனா - அமெரிக்கா இடையில் நிலவும் சூழ்நிலையை நாங்கள் விரும்பியதில்லை. அனைத்திற்கும் அமெரிக்கா தான் காரணம். இரு தரப்பு உறவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.