ஈரானிய பயணிகள் விமானத்தை இடைமறித்த அமெரிக்க போர் விமானம்
24 Jul,2020
சிரியாவின் மீது பறந்து கொண்டிருந்த ஈரானிய பயணிகள் விமானத்தை அமெரிக்காவின் எப்-15 போர் விமானம் இடைமறித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. அங்கு தெஹ்ரானின் ராணுவை இருப்பை முடிவுக்கு கொண்டுவர ஈரானிய படைகள், சிரிய அரசாங்க துருப்புகள் ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது. உள்நாட்டுப் போரில் இதுவரை 3,80,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மக்கள் தொகையில் பாதிபேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து பெய்ரூட் சென்ற மஹான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சிரியாவின் மீது பறந்து கொண்டிருந்த போது இஸ்ரேலிய போர் விமானம் நெருங்கி வந்தது. மோதலை தவிர்ப்பதற்காக பயணிகள் விமானத்தின் விமானி பறக்கும் உயரத்தை விரைவாகக் குறைத்தார். இதனால் விமானத்திலுள்ள பயணிகள் அலறினார்கள். சிலர் காயமடைந்தனர் என ஈரான் தொலைக்காட்சி வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டது. செல்போனில் எடுக்கப்பட்ட காட்சியில் பயணிகள் விமானத்துக்கு அருகே 2 போர் விமானங்கள் பறக்கின்றன. மற்றொரு வீடியோவில் உள்ளே இருக்கும் பயணிகள் அலறுகிறார்கள்.
இச்செய்தி ஒளிபரப்பானதும் அமெரிக்காவின் மத்திய பாதுகாப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தங்கள் எப்-15 விமானத்தின் வழக்கமான ரோந்தின் போது, மஹான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை பாதுகாப்பான தொலைவான ஆயிரம் மீட்டருக்கு அப்பால் இருந்து பரிசோதித்தோம். அது மஹான் ஏர்லைன்ஸின் பயணிகள் விமானம் என்பதை கண்டறிந்ததும் அங்கிருந்து விலகினோம். சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்பவே இந்த இடைமறிப்பு நிகழ்ந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது