தடுப்பூசி சோதனை வெற்றி: சீனா விஞ்ஞானிகள் அறிவிப்பு
22 Jul,2020
'கொரோனா' வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையில் நம்பிக்கை அளிக்கும் முடிவுகள் கிடைத்துள்ளதாக, சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சி, இந்தியா உள்பட உலகெங்கும் நடந்து வருகின்றது. இந்த வைரஸ் பரவல் துவங்கிய சீனாவில், தடுப்பூசியை மனிதர்களுக்கு அளித்து பரிசோதித்து பார்க்கப்படுகிறது. இரண்டாம் கட்டப் பரிசோதனை முடிந்த நிலையில், நல்ல பலன் கிடைத்துள்ளதாக, சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சீன நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது:முதல் கட்டத்தில், குறைந்த அளவு மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை நடந்தது. தற்போது, இரண்டாவது கட்டத்தில், அதிகமானோருக்கு மருந்து செலுத்தப்பட்டது. அதில், 55 வயதுக்கு மேற்பட்ட துணைக் குழுவுக்கும் மருந்து அளிக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட பரிசோதனையில், இந்த தடுப்பூசி, பாதுகாப்பானது என்பதும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது. இது நம்பிக்கையூட்டும் வகையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.