கொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதாக குற்றச்சாட்டு சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
22 Jul,2020
கொரோனாவை வேண்டுமென்றே பரப்பியதாக குற்றச்சாட்டு சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல்
கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகும், அந்த கொடிய வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு கட்டவிழ்த்துவிட்டதாகும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் அமெரிக்க மக்கள் சீனா மீது வழக்கு தொடர வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள் இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மசோதா நிறைவேறி சட்டமானால் கொரோனா தொற்றுக்கு சீனா காரணமாகிவிட்டது அல்லது கணிசமாக பங்களித்தது என்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்காவின் மத்திய கோர்ட்டுகளுக்கு அதிகாரம் வழங்கும்.
அத்துடன் கொரோனா தொற்றை உருவாக்கிய சீனாவின் பொறுப்பற்ற செயலுக்காக அந்த நாட்டின் சொத்துக்களை முடக்குவதற்கும் அமெரிக்க கோர்ட்டுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும். இந்த சட்ட மசோதாவை முன்மொழிந்தவர்களில் ஒருவரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. மார்தா மெக்சலி கூறுகையில் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொய்கள் மற்றும் வஞ்சங்களால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்கள், அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், வணிக இழப்புகளை சந்தித்தவர்கள் மற்றும் கொரோனாவால் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் சீனாவை பொறுப்புக்கூற வைப்பதற்கும், இழப்பீடு கோருவதற்கும் இந்த சட்ட மசோதா வழி செய்யும்“ எனக் கூறினார்.