சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி இருந்தாலும் அமெரிக்காவை முற்றிலும் திணறடித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் மற்றும் அதன் கோரப் பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த வைரஸை சீனா தனது ஆய்வகத்தில் உருவாக்கியதாகவும், திட்டமிட்டு பிற நாடுகளுக்கு கட்டவிழ்த்து விட்டதாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
ஏற்கனவே வர்த்தக போர், தென்சீனக்கடல் பிரச்சனை போன்றவற்றால் அமெரிக்கா- சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாகியிருந்த சூழலில் தற்போது கொரோனா வைரஸ் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே தீரா பகையை உருவாக்கியுள்ளது.
இந்தப் பிரச்சினையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவரும் அதேவேளையில் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வசைபாடியும் வருகிறது.
இந்த நிலையில் உலகத்துக்கு எதிராக சீனா முன்வைத்துள்ள சவாலுக்கு பதிலடி தர வேண்டிய நேரம் வந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது அந்நாட்டின் வெளியுறவு மந்திரி பாம்பியோ இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
சீன கம்யூனிஸ்டு கட்சி முன்வைத்த சவாலுக்கு எதிராக உலகம் பதிலடி தரும் நேரம் வந்துவிட்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆசிய நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி முன்வைக்கும் அச்சுறுத்தலை புரிந்து கொண்டுள்ளன.
அமெரிக்கா இந்த அச்சுறுத்தலை நீண்ட காலமாக எதிர்கொண்டு வருகிறது.
உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கும், சுதந்திரத்தை நேசிக்க மக்களுக்கும், நம் அனைவருக்கும் எதிராக சீனா முன்வைக்கும் சவாலுக்கு நாம் பதிலடி தர வேண்டியது அவசியம்.
கடந்த 40 ஆண்டுகளாக அடுத்தடுத்த அமெரிக்க நிர்வாகங்கள் வேறு வழியின்றி அமெரிக்காவை சீனா பலவீனப்படுத்த அனுமதித்தன. ஆனால் இனி அது நடக்காது என ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவுக்கு தப்பி வந்த ஹாங்காங்கைச் சேர்ந்த டாக்டர் யான் லிமெங்கின் கூற்றுப்படி கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு 3 வாரங்களுக்கு முன்பாகவே அது ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவும் என்பதை சீன அரசு அறிந்திருந்தது.
இந்த அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க தேவையான அறிவை உலகிற்கு மறுப்பதற்கான முயற்சியில் உலக சுகாதார அமைப்பும் சீனாவுக்கு ஒத்துழைத்தது.
இதை மூடிமறைத்ததற்காக சீனாவை பொறுப்பேற்கவைக்க உலகம் ஒன்றுபடும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு பாம்பியோ கூறினார்.