சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் மஜோர்காவில் கட்டுப்பாடு விதிக்க ஸ்பெயின் உத்தரவு!
16 Jul,2020
ஸ்பெயினின் பலேரிக் தீவான மஜோர்காவில் உள்ள பிராந்திய அதிகாரிகள், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலுக்கான சாத்தியங்களைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளனர்.
விருந்து வைப்பதற்கு பிரபலமான மாகலூஃப் மற்றும் பால்மா வீதிகளில் உள்ள மதுபானசாலைகளை மூட அதிகாரிகள் நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளைக் கூட்டுவது கொரோனா வைரஸ் தொற்றுகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்ற அச்சத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தீவு ஜேர்மனி மற்றும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிரபலமான இடமாகும்.
ஏறக்குறைய 30,000 இறப்புகளுடன் ஐரோப்பாவின் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், கடந்த மாதம் உலகின் மிகக் கடுமையான கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளில் இருந்து வெளியேறியது.
ஸ்பெயின், சட்டவிரோத விருந்துகளை ஏற்பாடு செய்வோருக்கு அல்லது உடல் ரீதியான தூர மற்றும் முகக்கவசங்கள் குறித்த விதிகளை மீறுவதற்கும் பிராந்திய அரசாங்கம் ஏற்கனவே கடுமையான அபராதங்களை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.