நடுவானில் வெடித்துச் சிதறிய சீன ராக்கெட்!
12 Jul,2020
விண்ணில் ஏவப்பட்ட ஒரு சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது சீனாவின் அதி நவீன ராக்கெட்டான குய்சொ - 11. இந்த ராக்கெட்டுடன் குறைந்த புவி வட்டப்பாதையில் சுற்றும் இரண்டு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவத் திட்டமிட்டிருந்த சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
சீனாவின் வெற்றிகரமான ராக்கெட் 'குய்சோ-1ஏ'. இதை மேம்படுத்தி அதி நவீன தொழில் நுட்பத்தில் புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டது சீனா. குய்சோ 11 என்று பெயர் சூட்டப்பட்ட இந்த ராக்கெட் 2.2 மீட்டர் விட்டத்தையும் 700 டன் எடையையும் கொண்டது. இந்த ராக்கெட்டால் 1000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களைச் சுமந்து புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்த முடியும் என்று சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்துறை கழகத்தின் துணை நிறுவனமான எக்ஸ்பேஸ் நிறுவனம் கூறியிருந்தது. மேலும், இந்த ராக்கெட்டில் திட எரிபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் எரிபொருள் செலவும் மிச்சம் ஆகும்.
சென்டி ஸ்பேஸ் 1 எஸ் 2, ஜுலின் - 1 கஃபன் - 02இ ஆகிய இரண்டு செயற்கைக்கோள்கள் குய்சோ 11 ராக்கெட்டுடன் விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் வணிக நோக்கத்துக்குப் பயன்படுத்த சீனா திட்டமிட்டிருந்தது.
குறைந்த செலவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த குய்சோ 11 ராக்கெட் நேற்று பெய்ஜிங் நேரப்படி 12:17 க்கு விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்த ராக்கெட் அடுத்த ஒரு நிமிடத்தில் நடுவானில் வெடித்துச் சிதறியது.
2015 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குய்சோ 11 ராக்கெட் 2018 - ம் ஆண்டே விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டது. ஆனால், ராக்கெட்டில் ஏற்பட்ட பல்வேறு தொழில்நுட்ப காரணங்களால் ராக்கெட் ஏவும் நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டது. தொழில் நுட்பக் கோளாறுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறி சீன விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
"ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில் நுட்ப காரணங்களால் ராக்கெட் வெடித்துச் சிதறியிருக்கலாம். சரியான காரணத்தைக் கண்டறிய ஆய்வு செய்து வருகிறோம் என்று" என்று ஜியுகுவான் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.