'அமெரிக்கா -- சீனா இடையிலான உறவு, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டுடன், இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பில்லை,'' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இந்த ஆண்டு துவக்கத்தில், அமெரிக்கா -- சீனா இடையில் நடந்த சுமுக பேச்சை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட ஒப்பந்தமும், விரைவில் கையெழுத்தாகும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, உலகம் முழுதும் பரவி, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 'இந்த விவகாரத்தை சீனா, சரிவர கையாளவில்லை' என, அமெரிக்கா குற்றம்சாட்டியது.இந்நிலையில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், நேற்று கூறியதாவது:கொரோனா தொற்று, உலகம் முழுதும் பரவாமல் சீனா தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.
ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை. வூஹான் நகரில் இருந்து, சீனாவின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்தினர். அமெரிக்கா -- சீனா இடையிலான உறவு, மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்களுடன் இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு, இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2016ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில், பொய்யான தகவல்களை கூறியதாக, அதிபர் டிரம்பின் நீண்ட கால நண்பரும், ஆலோசகருமான, ரோஜர் ஸ்டோனுக்கு, மூன்று ஆண்டுகள், நான்கு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நீண்டகால நண்பர், ரோஜர் ஸ்டோனின் தண்டனையை, நேற்று ரத்து செய்தார்.இது குறித்து, வெள்ளை மாளிகை, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரோஜர் ஸ்டோன் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், பலரை போலவே அவர் மிகவும் நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டார். அவர், இப்போது ஒரு சுதந்திர மனிதர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.