மாயமான தென்கொரிய மேயர் சடலமாக கண்டெடுப்பு!
10 Jul,2020
தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் மாயமான நிலையில், ஏழு மணி நேர தேடுதலுக்கு பின்னர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேயர் பார்க் ஒன் சூன் உடல் சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் வயது 64, தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 2014ம் ஆண்டு மேயராக தேர்வானார். அதன்பின்னர் 2018ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மேயரானார்.
மீ டு புகார்
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சியோல் மேயர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மேயர் பார்க் மீது 'மி டூ' மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் மேயர் பார்க் ஒன் சூன் திடீரென மாயமானார். அவர் மாயமான தகவலை அவரது மகள் தான் முதல்முதலாக போலீசுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், அவரது செல்போன் கடைசியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. அதன்பிறகு செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.இதையடுத்து சியோலின் சங்பக் மலைப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 600 பேர் , பார்க்கை தீவிரமாக தேடினர். சுமார் 7 மணி தேடுதலுக்கு பின்னர் அவரை பிணமாக கண்டுபிடித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.