ரூ.8,250 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்; ‘ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்காக தயாரிக்கப்பட்டவை’
03 Jul,2020
இத்தாலி நாட்டில் உள்ள சலேர்னோ துறைமுகத்தில் கண்டெய்னர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 டன் ஆம்படமைன் போதை மாத்திரைகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போதை மாத்திரைகள் அனைத்தும் பெரிய டிரம்களில் காகிதத்திலும், கியர் சக்கரங்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தப் போதை மாத்திரைகள் விவகாரத்தில் உள்ளூர் குற்ற குழுக்களுக்கு தொடர்பு இருக்கிறதா என போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த போதை மாத்திரைகளின் மதிப்பு சுமார் 1.1 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,250 கோடி) என கூறப்படுகிறது.
இந்தளவுக்கு போதை மாத்திரைகள் இத்தாலியில் ஒரே சோதனையில் சிக்கி இருப்பது சாதனை அளவாக பார்க்கப்படுகிறது. இந்த போதை மாத்திரைகள், ஒட்டுமொத்த ஐரோப்பிய சந்தையையும் திருப்திப்படுத்த போதுமானவை என தெரிய வந்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பதற்காக இந்த போதை மாத்திரைகள் உற்பத்தி, வினியோகம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல கடத்தல்காரர்களின் பார்வை சிரியாவின் பக்கம் திரும்பி உள்ளதாகவும், அங்கு இதன் உற்பத்தி பாதிக்கவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.
மேலும் சிரியா உள்நாட்டுப்போரில் பயத்தையும், சோர்வையும் தடுப்பதற்காக இந்த மாத்திரைகளை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் உட்கொண்டு வந்துள்ளனர்.
இப்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதை மாத்திரைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி அளிப்பதற்காக சிரியா நாட்டில் தயாரிக்கப்பட்டவை என தகவல்கள் கூறுகின்றன