தலிபான்களுக்கு உதவி செய்கிறதா ரஷியா? -
28 Jun,2020
ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடைபெற்று வருகிறது. இந்த உள்நாட்டு போரில் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தியுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க படைகளை குறிவைத்து தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதல்களில் 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் பின்னர், தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படை வீரர்களை தலிபான் பயங்கரவாதிகள் கொன்றால் அவர்களுக்கு ரஷிய உளவு அமைப்பு ஆயுதம், பண உதவி செய்வதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. இந்த செய்தி அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து மார்ச் மாதமே அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் பேச இருந்ததாகவும் ஆனால் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என குழப்பம் ஏற்பட்டதால் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்ததாக நியூயார்க் டைம்சில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க படைகளை தலிபான்கள் கொன்றால் பயங்கரவாதிகளுக்கு ரஷிய உளவு அமைப்பு பணம், ஆயுத உதவி வழங்குவதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி குறித்து பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தற்போது பூதாகாரம் ஆகி வரும் நிலையில் ரஷியா இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் தயாரித்த ஆயுதங்களையே பயன்படுத்துவதாக தலிபான்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.