பசிபிக் கடல் தீவில் சீனா ஆதிக்கம்; அமெரிக்காவுக்குப் போட்டி?
27 Jun,2020
பசிபிக் கடற்பகுதியில் உள்ளது கிரிபாட்டி தீவுத்தொடர். ஆசிய நாடுகளையும் அமெரிக்காவையும் இணைக்கும் முக்கிய தீவுத் தொடராக இது விளங்குவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கட்டுபாட்டில் கிரிபாட்டி தீவுகள் உள்ளன. அமெரிக்காவின் ராணுவப் படைகள் கிரிபாட்டி தீவுகளில் பயிற்சி எடுத்துவந்தன.
ராணுவப் பயிற்சிக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இந்த தீவுத் தொடரை கருதியது. இந்தத் தீவின் வளர்ச்சியில் ஆஸ்திரேலியாவும் முக்கியப் பங்கு வகித்து வந்தது. இதற்காக அதிக நிதி ஒதுக்கியது. கிரிபாட்டி தீவுகள் மீது சீனாவுக்கு எப்போதுமே ஒரு கண் இருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது சீனா இந்த தீவு தொடரில் தனது தூதரகத்தை நிறுவியுள்ளது. இந்தத் தீவின் நிர்வாகத்தில் ஆஸ்திரேலியாவை அடுத்து நியூசிலாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகளுக்கும் பங்குண்டு.
ஒரு லட்சத்து 16 ஆயிரம் மக்கள் வாழும் இந்த குட்டித் தீவில் அமெரிக்காவுக்கு போட்டியாக தனது ஆதிக்கத்தை செலுத்த முன்வந்துள்ளது சீனா. 2006ம் ஆண்டு சீன உயர் அதிகாரி ஜியாபோ இந்த தீவுக்கு வருகை தந்தார். இந்த தீவை கண்டு ஆச்சரியமடைந்த அவர் இந்த தீவின் வளர்ச்சிக்கு 424 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த தீவில் விவசாயம், மீன்பிடித் தொழில் மற்றும் இதர தொழில்களின் முன்னேற்றத்திற்கு சீனாவின் இந்த நிதி பயன்படும்.
ஆஸ்திரேலியாவை அடுத்து சீனா தான் இந்த தீவின் வளர்ச்சிக்கு அதிக நிதி கொடுத்துள்ள நாடு என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் கிரிபாட்டி தீவுத்தொடர் பல விஞ்ஞான முன்னேற்றங்களை அடையும். பிரபல சுற்றுலாத் தலமாகவும் மாற வாய்ப்புள்ளது என சீனா கணிக்கிறது. பசிபிக் கடற்பரப்பில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்த இந்த தீவை பயன்படுத்திக்கொள்கிறது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே இந்தத் தீவை சொந்தமாக்கிக் கொள்வதில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.