கொரோனா வைரஸ்: அவசரகால நிலையை நீக்கி சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கும் ஸ்பெயின்
22 Jun,2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுலில் இருந்த அவசரகால நிலையை நீக்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் மீண்டும் தனது எல்லைகளை திறந்துள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மூன்று மாதங்களாக கடினமான முடக்கநிலையை அறிவித்திருந்த ஸ்பெயின், தற்போது பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளை தனிமைப்படுத்தல் இல்லாமல் நாட்டுக்குள் நுழையவும் அனுமதியளித்துள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஷெங்கன் நாடுகளுக்கு தனது எல்லைகளை ஸ்பெயின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் திறந்துள்ளது.
முடக்கநிலை தளர்த்தப்பட்ட நிலையில் சுகாதாரக் கட்டுப்பாடுகள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் பெட்ரோ சான்செஸ் எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஐரோப்பாவில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திய மூன்றாவது நடாகக் காணப்படும் ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை 28 ஆயிரத்து 322 ஆக உள்ளது.
ஆண்டுக்கு சுமார் 80 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஸ்பெயின் ஈர்க்கிறது, சுற்றுலாத்துறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% க்கும் அதிகமாக இலாபத்தை வழங்குகிறது.
இந்நிலையில் கோடை காலம் முடிவதற்குள் விடுமுறைக்காக பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதானது ஸ்பெயினின் பொருளாதாரத்திற்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.