அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ’அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த புத்தகம் வரும் 23 அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக போல்டன் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
மேலும் வடகொரியா, ஈரான் போன்ற உலகின் பல்வேறு நாடுகளுடன் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக நடைமுறைகள் குறித்தும் அந்த புத்தக்கதில் எழுதப்பட்டுள்ளது.
புத்தகம் அதிகாரப்பூர்வமாக நாளை மறுதினம் வெளியாக உள்ளது என்றாலும் அந்த புத்தகத்தின் பதிப்புகள் செய்தி நிறுவனங்களுக்கும், பல அரசியல் விமர்சகர்களின் கைகளுக்கும் ஏற்கனவே சென்று விட்டது என தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும், இந்த புத்தகத்தை வாங்க ஆயிரக்கணக்கானோர் இந்த புத்தகத்தை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு போல்டன் அளித்த பேட்டியில், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் என்றும், அதிபர் வேலைகளை செய்யக்கூடிய திறமை அவரிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
போல்டனின் இந்த கருத்துக்கள் பூதாகரமாகி அவரின் புத்தகம் மீது மிகுந்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் போல்டனின் ‘அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ புத்தகத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என டிரம்ப் நிர்வாகத்தின் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டத்து.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புத்தகம் ஏற்கனவே பலரது கைகளுக்கு சென்று விட்டதாகவும், இனிமேல் இதை தடுப்பது இயலாத காரியம் எனக்கூறி போல்டனின் புத்தகம் வெளியீட்டை தடை செய்ய மறுப்பு தெரிவித்தார். ஆனால், புத்தகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்கள் பகிரப்பட்டிருந்தால் போல்டன் சட்ட ரீதியில் விவகாரங்களை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
புத்தகம் வெளியாக நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காததால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார்.