சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
20 Jun,2020
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அங்கு கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் சிங்கப்பூரில் கடைகள், மால்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டன. இதனால் கடைகளில் நீண்டவரிசையில் நின்று பொதுமக்கள் பொருட்களை வாங்கிச்சென்றனர். உணவகங்களில் சமூகஇடைவெளியோடு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகளும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன. இருப்பினும் நூலகங்களும், அருங்காட்சியகங்களும் திறக்கப்படவில்லை.
கட்டுப்பாடுகள் ஒருபுறம் தளர்த்தப்பட்டாலும், ஒரு புறம் நோயின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் மொத்தம் 41 ஆயிரத்து 83 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர். 33 ஆயிரத்து 500 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.