ஜான் போல்டன் ஒரு துரோகி - மைக் பாம்பியோ அதிரடி
20 Jun,2020
அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ’அது நடந்த அறை - ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார்.
அந்த புத்தகம் வரும் 23 அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் டொனால்ட் டிரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான்
வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொண்டதாக போல்டன் அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், போல்டன் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு பொருத்தமற்றவர் என்றும், அதிபர் வேலைகளை செய்யக்கூடிய திறமை அவரிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம்மை முதல் முதலில் சந்தித்த போது வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தனக்கு ஒரு கடிதத்தம் அனுப்பி இருந்தார். அதில் வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் மிகவும் கேவலமானவர் என எழுதியிருந்தாக போல்டன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளதாக நியுயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் போல்டன் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாம்பியோ, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போல்டன் எண்ணற்ற பொய்களை பரப்பி வருகிறார். அரைகுறை உண்மைகளும், வெளிப்படையான பொய்களையும் அவர் தெரிவித்து வருகிறார்.
ஒரு துரோகியாக மாறி அமெரிக்க மக்களின் நம்பிக்கையை மீறிய போல்டனால் மிகவும் ஆபத்தும் வருத்தமும் ஏற்பட்டுள்ளது.
உலகில் உள்ள எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் கூறிக்கொள்வது எண்ணவென்றால் உங்களுக்கு தெரியும் அதிபர் டிரம்பின் அமெரிக்கா உலகின் நம்மையையே விரும்புகிறது என்றார்