தீவிரமடையும் கொரோனா - ஒரே நாளில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று
20 Jun,2020
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இதற்கிடையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 87 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 36 லட்சத்து 57 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 லட்சத்து 16 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதாகவும், கடந்த வியாழக்கிழமை மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதான் கொரோனா பரவிய நாள் முதல் ஒரே நாளில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் அதிகபட்ச ஒருநாள் எண்ணிக்கை ஆகும். புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறுகையில், உலகம் தற்போது புதிய மற்றும் ஆபத்தான பகுதியில் உள்ளது. கொரோனா வைரஸ் தற்போதும் வேகமாக பரவி வருகிறது. மேலும், அது இன்னும் மிக கொடூரமாகவே உள்ளது. இந்த வைரசுக்கு பலரும் இன்னும் எளிதில் இலக்காகும் நிலையில்தான் உள்ளனர்.