அதனால்தான் அந்த வகை மீன்களை சிலி, நார்வே, பாரோ தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து சீனா இறக்குமதி செய்து வந்தது. இந்த மீன், சீன தலைநகரான பீஜிங்கில் உள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தையில் மிகவும் பிரபலம். மக்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த மீன்களை வாங்குவதற்காகவே அந்த சந்தைக்கு போவார்களாம். அந்த மீனின் சுவையே தனியாம்.
இந்த நிலையில்தான் பீஜிங் மக்களை அதிர வைத்த தகவல் கடந்த வாரம் வெளியானது. அது, ஜின்பாடி சந்தையில், சால்மன் மீன்களை வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான். பீஜிங் நகரின் 80 சதவீத காய்கறி, மாமிச தேவைகளை சந்திக்கும் அந்த சந்தைக்கு தினமும் பல்லாயிரகணக்கான வாடிக்கையாளர்கள் வந்து போவார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்த அம்சம்.
ஜின்பாடி சந்தையில் சால்மன்மீன்களை வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிப்பை தொடர்ந்துதான் பீஜிங் நகர மக்களுக்கு கொரோனாவின் இரண்டாவது அலை கொத்து கொத்தாக தாக்கத்தொடங்கியது.
ஜின்பாடி சந்தையின் சுற்றுப்புறங்கள் அனைத்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டு விட்டன, விமான சேவைகள் ரத்தாகி இருக்கின்றன, ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட போர்க்கால நிலையில் சீன தலைநகர் வைக்கப்பட்டுள்ளது. ஜின்பாடி சந்தையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 40 மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் சில, மீன் வெட்டும் பலகைகள் அல்ல என்கிறது பீஜிங் நகர சுகாதார கமிஷன்.
இப்படி கொரோனா தொற்றின் மையமாக ஜின்பாடி சந்தை மாறி விட்டிருப்பதும், சால்மன் மீன்களை வெட்டும் பலகைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும் இப்போது தலைநகர மக்களை சால்மன் மீன் என்றாலே அலறிக்கொண்டு ஓட்டம் எடுக்க வைத்திருக்கிறது.
அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், உணவு விடுதிகளில் இருந்து சால்மன் மீன்களை அவசர அவசரமாக அப்புறப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து சால்மன் மீன்களை பெருவாரியாக இறக்குமதி செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பீஜிங்கை அடுத்துள்ள தியான்ஜினில் 22 வயது நபர் ஒருவர் குளிரூட்டப்பட்ட கடல் உணவுப்பொருளை சுத்தம் செய்து வந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.
சால்மன் மீன், கொரோனா வைரசின் உறைவிடமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு காரணம், ஜின்பாடி சந்தையில் சால்மன் மீன் வெட்டும் பலகைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டபின்னர் கிட்டத்தட்ட 150 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதுதான்.
அதே நேரத்தில் கொரோனா வைரசின் பிறப்பிடமாக இன்று வரை கருதப்படுகிற உகான் சந்தையைப் போல இந்த ஜின்பாடி சந்தை வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது இல்லையாம்.
சால்மன் மீன் என்றாலே பீஜிங் மக்கள் அலறுகிற இந்த தருணத்தில், நோய் கட்டுப்பாட்டுக்கான சீன தேசிய மையத்தின் அவசரகால பதிலளிப்பு பிரிவு துணை இயக்குனர் ஷி குவாகிங் கூறுகையில், “சால்மன் மீன், சந்தையை அடைவதற்கு முன்பாக கொரோனா வைரஸ் தொற்று இருந்ததற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. வைரஸ், ஜின்பாடி சந்தையில்தான் இருந்திருக்க வேண்டும்” என்கிறார்.
இதை வல்லுனர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
இதுபற்றி சிங்குவா பல்கலைக்கழகத்தின் வைரலாலஜிஸ்ட் செங் காங் கருத்து தெரிவிக்கையில், “வைரஸ்கள் செல்களை பாதிப்பதற்கு ’ஹோஸ்ட்’ செல் மேற்பரப்பில் உள்ள வைரஸ் ஏற்பியை (ரிசப்டர்) நம்பி இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஏற்பி இல்லாமல் அவை வெற்றிகரமாக செல்களுக்குள் நுழைய முடியாது, அப்படிப்பட்ட ஏற்பிகளை பொறுத்தமட்டில் அவை பாலூட்டிகளில் மட்டுமே உள்ளன. மீன்களில் இல்லை” என்று வாதிடுகிறார். ஆனால், நோய் கட்டுப்பாட்டுக்கான சீன தேசிய மையத்தின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜூன்யு, “ மீன்கள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் வைரஸ்களை பிடித்துக்கொண்டிருக்க முடியாது. அதே நேரத்தில் வாழ்விடத்துக்கு வெளியே வந்துவிடுகிறபோது, அவற்றை கையாள்கிற தொழிலாளர்களால் அல்லது போக்குவரத்தின்போது வைரஸ் தொற்றிக்கொள்ள முடியும்” என்று விளக்குகிறார்.
ஒட்டுமொத்தமாக கொரோனா வைரசின் அசல் ஆதாரம் எது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை அல்லது அது எங்கிருந்து வந்திருக்கலாம் என்பது தெரியவில்லை.
அதே நேரத்தில் உணவின் மூலமோ பானங்களின் மூலமோ மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், உணவுப்பொருட்களின் ‘பேக்கேஜிங்’ மூலம் கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்றும் கூறுகிறது.
இந்த நிலையில் சீனா சிலி, நார்வோ, போரோ தீவுகள், ஆஸ்திரேலியாவில் இருந்து குளிரூட்டி, பதப்படுத்தப்பட்ட 80 ஆயிரம் டன் சால்மன் மீன்களை இறக்குமதி செய்து வந்து இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
இப்போது சால்மன் மீன் வர்த்தகம் மட்டும் பாதிக்கவில்லை. மக்கள் வாங்கி சமைத்து ருசிப்பதுவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனாவே, உன் குறிதான் என்ன என்று பீஜிங் மக்கள் இப்போது அங்கலாய்க்கத்தொடங்கி இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்!