அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், கடந்த 25-ந் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார். இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிராகவும் , அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது பெருமளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. தற்போதும் அமெரிக்காவின் பல நகரங்களில் நிறம் மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
அமெரிக்காவில் மேலும் ஒரு கருப்பின வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் அது பெரும் அதிர்ச்சியையும் கறுப்பின மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோர்ஜியா மாகாணத்தின் தலைநகர் அட்லாண்டா வை சேர்ந்த 27 வயதான ரேய்ஷர்ட் புரூக்ஸ் என்ற கருப்பரின வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லாண்டாவில் உள்ள ஒரு உணவு விடுதியில் கார்கள் நிறுத்துமிடத்தில் ரேஷர்ட் புரூக்ஸ் தனது காரிலேயே தூங்கியதாக கூறப்படுகிறது.
சுட்டுக்கொலை
இதனையடுத்து மற்ற வாடிக்கையாளர்கள் வருகையை அவர் வேண்டுமென்றே தடுப்பதாக சிலர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் ரேஷர்ட் புரூக்சை கைது செய்த முயற்சித்தனர். அப்போது அவருக்கும் போலீசாருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
போலீசார் அவரை விரட்டி சென்றனர். சிறிது தூரம் ஓடிய பிறகு ரேஷர்ட் புரூக்ஸ் திடீரென நின்று போலீசாரை நோக்கி துப்பாக்கி போன்ற ஏதோ ஒரு பொருளை நீட்டினார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் ரேஷர்ட் புரூக்சை துப்பாக்கியால் சுட்டனர். குண்டு காயத்துடன் சிறிது தூரம் ஓடிய அவர் பின்னர் சரிந்து விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
கொல்லப்பட்ட ரேஷர்ட் புரூக்ஸ் 4 குழந்தைகளுக்கு தந்தை ஆவார். தனது மகளின் 8வது பிறந்த தினத்தை வெள்ளிக்கிழமை கொண்டாடிய நிலையில் அவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனிடையே ரேஷர்ட் புரூக்ஸ் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து அட்லாண்டா நகரில் பெரும் போராட்டம் வெடித்ததது.
ரேஷர்ட் புரூக்ஸ் நபர் சுடப்பட்ட இடத்தில் உள்ள வெண்டி உணவு விடுதியை போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர். நெடுஞ்சாலையில் போக்குவரத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அட்லாண்டா நகரின் தலைமை போலீஸ் அதிகாரி எரிகா ஷீட்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து இடைக்கால தலைமை அதிகாரியாக ரோட்னி பைரண்ட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையிலா புரூக்சை சுட்டுக்கொன்ற அந்த அடையாளம் தெரியாத போலீஸ் அதிகாரி உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டதாக அட்லாண்டா நகரின் மேயர் அறிவித்தார்.