2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவுஸ்ரேலிய பிரஜைக்கு மரண தண்டனை விதித்த சீனா!
14 Jun,2020
2013 ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவுஸ்ரேலிய பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பயணப்பையில் 7.5 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து அவுஸ்ரேலிய அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது குறித்து மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு 2013இல் கைதான நபருக்கு இப்போது ஏன் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல் வெளியாகவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வர்த்தக மோதல்கள் மற்றும் பரஸ்பர விமர்சனங்களால் சீனாவிற்கும் அவுஸ்ரேலியாவிற்கும் இடையிலான உறவுகள் சிதைந்தன.
கடந்த ஆண்டு பிற்பகுதியில் சீன நகரமான வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸின் தோற்றம் குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்து அவுஸ்ரேலியா சீனாவை கோபப்படுத்தியது.
இதன்பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு செல்பவர்கள் குறித்தும் சீனா தமது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் சில இறக்குமதி பொருட்களுக்கும் சீனா தடைவிதித்திருத்திருந்தது.
இந்நிலையில் அவுஸ்ரேலியா ஒருபோதும் அச்சுறுத்தல்களால் மிரண்டுபோகாது என பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.