முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதிக்கு அபராதம்!
11 Jun,2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்கநிலை விதிகளை மீறியதற்காக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 3ஆம் திகதி முடக்கநிலை விதிகளை மீறி, மத்திய நகரமான க்மெல்னிட்ஸ்கியில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றதற்காக அவருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கியின் அலுவலகம், ஜெலென்ஸ்கி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காபி அருந்திய புகைப்படத்தை வெளியிட்டது. இதில், ஜனாதிபதியும் முகக்கவசம் இன்றி இருந்தார்.
இதில் ஜனாதிபதித் தலைமைத் தளபதி ஆண்ட்ரி யெர்மக், ஜனாதிபதி அலுவலகத்தின் முதல் துணைத் தலைவர் செர்ஹி ட்ரோபிமோவ், க்மெல்னிட்ஸ்கி கவர்னர் டிமிட்ரோ கேபினெட், மற்றும் க்மெல்னிட்ஸ்கி மேயர் ஒலெக்சாண்டர் சிம்ஷிஷின் ஆகியோர் இருந்தனர்.
இந்தநிலையில், முடக்கநிலை விதிகளை மீறியதற்காக ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு எவ்வளவு தொகை அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து தகவல் இல்லை.
இதனிடையே, இவ்வாறு அபாரதம் விதிக்கப்பட்டதனை ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கி வரவேற்றுள்ளார்.