நிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்
06 Jun,2020
'கொரோனா' வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் ஆயிரக்கணக்கான திரை அரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாக சமீபத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகள் சீனாவில் தான் உள்ளன. அங்கு 69 ஆயிரத்து 787 திரையரங்குகள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் புதிதாக 9708 திரையரங்குகள் திறக்கப்பட்டன.
அமெரிக்காவின் 'ஹாலிவுட்'டுக்குப் பின் மிகப் பெரிய அளவில் லாபம் கொழிக்கும் தொழிலாக சீன திரைத்துறை உள்ளது. ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் கொரோனா தொற்று பரவத் துவங்கிய பின் ஜனவரி 23ல் அந்நகரம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதையடுத்து அன்றைய தினமே சீனா முழுவதிலும் உள்ள திரையரங்குகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக சீன திரைத்துறையே முற்றிலுமாக முடக்கப்பட்டு இருப்பதால் 32 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீன திரையரங்குகளின் எதிர்காலம் குறித்து அறிய சீன திரைப்பட சங்கம் சீன திரைப்பட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தின. அதன் முடிவில் 40 சதவீத திரையரங்குகள் இந்த நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வருவது கடினம் என தெரியவந்துள்ளது.மேலும் ஆயிரக்கணக்கான திரையரங்குகள் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் உள்ளதாகவும், திரைத்துறை மற்றும் திரையரங்கங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
'கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்த பின் 10 சதவீத திரையரங்குகள் மட்டும் பழைய வேகத்தோடு இயங்க வாய்ப்புள்ளது. மற்றபடி கருத்துக்கணிப்பு முடிவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை' என ஆய்வில் தெரியவந்துள்ளது. திரையரங்கம் திறப்பதற்கான தடை உத்தரவு அக்டோபர் வரை நீடித்தால் திரைத்துறையின் இந்த ஆண்டுக்கான வருவாயில் 91 சதவீதம் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.