டிரம்புக்கு போலீஸ் தலைமை அதிகாரி அட்வைஸ் c n n vedio
04 Jun,2020
அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு, காவல்துறை கைது நடவடிக்கையின் போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்கு அமலில் இருந்து வரும் பொதுமுடக்கத்தையும் கருப்பர் இன மக்கள் பொருட்படுத்தாமல் வீதிக்கு வந்து போராடி வருவதால். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நியூயார்க் நகரில் ஊரடங்கு அமலுக்கு வரும் சில மணி நேரத்திற்கு முன்னதாக டைம் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்தனர். ஜார்ஜ் பிளாய்டு இறப்பிற்கு நீதிகேட்டு முழக்கம் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில் சாலையோர கடைகள் சூறையாடப்பட்டன. இதைத்தொடர்ந்து அந்நகரில் காலவரையின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மேயர் லண்டன் பிரீட் அறிவித்தார்.
உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் அதிபரின் வெள்ளை மாளிகை அருகே போராட்டக்காரர்கள் அதிகளவில் கூடினர். தொடர்ந்து வெள்ளை மாளிகை நோக்கி பேரணி சென்றவர்களை போலீசார் கலைக்க முயன்றதால் கலவரம் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் தாக்கியும் அனைவரையும் விரட்டியடித்தனர். அதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையை சுற்றி செவ்வாய்க்கிழமை வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
நிலைமை கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை அருகே அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டார். வார விடுமுறையின் போது நடைபெற்ற கலவரத்தில் இந்த தேவாலயத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்த நிலையில், அதனை அதிபர் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், இனவெறிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோரை தீவிரவாத அமைப்பாக கருதுவதாகவும், உள்நாட்டு தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார். நாடு முழுவதும் நடைபெற்று வரும் கலவர சம்பவங்களை கட்டுப்படுத்த தேசிய படையை மாகாண ஆளுநர்கள் பயன்படுத்த தவறினால், ராணுவத்தை வரவழைக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்தார்.நான் ஆயிரக்கணக்கான ஆயுதம் ஏந்திய படை வீரர்ர்களை, ராணுவத்தினர், சட்டம்-ஒழுங்கு அதிகாரிகளை களமிறக்கி கலவரத்தை நிறுத்துவேன். வன்முறையின் போது கடைகள் சூறையாடல், சொத்துக்கு சேதம் விழைவிப்பதை தடுப்பேன். இந்த தீவிரவாத செயலை ஒருங்கிணைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட கால சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் டிரம்பின் எச்சரிக்கையை மீறி அமெரிக்கா முழுவதும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சி.என்.என் தொலைக்காட்சி பேட்டியில் டிரம்புக்கு எதிராக ஹுஸ்டன் மாநில தலைமை போலீஸ் அதிகாரி Art Acevedo பேசியது வைரலாக பரவி வருகிறது. “நான் அமெரிக்க அதிபருக்கு சிலவற்றை சொல்ல வேண்டியது உள்ளது, நாட்டின் போலீஸ் தலைமை அதிகாரிகள் சார்பாக கூறுவது என்னவென்றால், உங்களிடம் ஆக்கப்பூர்வமாக சொல்வதற்கு எதுவும் இல்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள்
மேலும், இளைஞர்களின் வாழ்வை ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தாதீர்கள் என்றும் அவர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.