தமிழக மீனவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
27 May,2020
தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள், ஜூன் 1ஆம் திகதி முதல் தொழிலுக்குச் செல்ல முடியுமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசின் மீன்வளத்துறை கடந்த மார்ச் 20 ஆம் திகதி வெளியிட்ட ஆணையில், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜுலை 31 வரை 61 நாட்களுக்கும் விசைப்படகுகள் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்கத் தடை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காலத்தையும் மீன்பிடி தடைகாலமாக கணக்கில் கொண்டு, மீன்பிடி தடை காலத்தினை மாற்றி அமைத்து ஆணை வழங்குமாறு மத்திய மீன்வளத்துறை அமைச்சருக்கு, தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டது. வேறு சில மாநிலங்களும் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அந்தவகையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசின் மீன்வளத்துறை, மீன்பிடி தடைக்காலத்தை மாற்றி அமைத்துள்ளது.
அதாவது, இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31 வரை 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூன் 31 வரை 47 நாட்களுக்கும், தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடித் தடைகாலம் அமுல்படுத்தப்படுமென திருத்திய ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா நோய்கட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியிலுள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1 ஆம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம்.
அதேபோன்று மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகு மீனவர்கள், ஆகஸ்ட் 1ஆம் திகதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். இதனூடாக தமிழ்நாட்டின் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்களும், மீன்பிடி தொழிலை சார்ந்துள்ளவர்களும் பயன்பெறுவார்கள்” என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.