தனக்கு கொரோனா இருப்பதை மறைத்து 91 பேருக்கு பரப்பிய நபர்!
24 May,2020
அமெரிக்காவின் மிசோரியில் முடி திருத்தும் கடையில் சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என 91 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காக ஒருவர் காரணமாக அமைந்துள்ளார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்டில் செயல்பட்டுவரும் கிரேட் கிளிப்ஸ் என்ற முடி திருத்தும் நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. பெயர் வெளியிடப்படாத முடி திருத்தும் ஊழியர் ஒருவர் தமக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தும் அதை மறைத்து பணிக்கு சென்றுள்ளார்.
மே மாதம் 12 முதல் 21 ஆம் திகதி வரை அவர் பணியாற்றிய நிலையில், அந்த நிலையத்தில் வந்து சென்ற சுமார் 84 வாடிக்கையாளர்கள் மற்றும் சக ஊழியர்கள் 7 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த தகவலை சுகாதாரத்துறை ஆணையர் ஒருவரே வெளியிட்டுள்ளார். தற்போது அந்த முடி திருத்தும் நிலையத்தில் முகக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த 84 வாடிக்கையாளர்கள் தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களுக்கு உரிய சோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் முடி திருத்தும் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவர்களை கண்காணிப்பது எளிதாக முடிந்தது என்கின்றனர் அதிகாரிகள்.
மிசோரி மாகாணத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 12,000 என தெரியவந்துள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 600 பேர் மரணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்த அமெரிக்காவில் கொரோனாவுக்கு இலக்கானவர்கள் 1.6 மில்லியன் என தெரியவந்துள்ளது