அமெரிக்காவிடமிருந்து காக்க ஈரானிய கப்பல்களுக்கு வெனிசுலா பாதுகாப்பு
22 May,2020
'ஈரானில் இருந்து வெனிசுவேலா வரும், ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருக்க, அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும்' என, வெனிசுலா தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய, பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்கள் வெனிசுலாவிடம் உள்ளன. ஆனால் அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், கடந்த 20 ஆண்டுகளாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈரான் மற்றும் வெனிசுவேலா மீது, பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், ஈரானில் இருந்து ஐந்து எண்ணெய் கப்பல்கள், வெனிசுலா வரவுள்ளன. அந்த கப்பல்களில் வரும் பெட்ரோல், வெனிசுலாவுக்கு மிகவும் அத்தியாவசியமானதாகக் கருதப்படுகிறது. 'இந்தக் கப்பல்களை அமெரிக்கா தடுக்கவோ, தாக்கவோ வாய்ப்புகள் இருப்பதால், ஈரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், ஈரானிய எண்ணெய் கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும்' என, வெனிசுவேலா தெரிவித்துள்ளது.
'கொரோனா விவகாரத்தில் ஆரம்பக்கட்டத்தில் அலட்சியமாக செயல்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், தன் மீதான விமர்சனங்களில் இருந்து தப்ப மற்ற நாடுகளை குறை சொல்லியும் மிரட்டியும் வருகிறார். அவர், கொரோனா விவகாரத்தை திசை திருப்ப, மற்ற நாடுகள் மீது போர் தொடுக்கவும் முயற்சிப்பார். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெனிசுலா இந்த முடிவை எடுத்திருக்கிறது' என, அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது