ஈராக்- சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற்றப்படும்: ஈரானின் மூத்த தலைவர் திட்டவட்டம்
19 May,2020
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகள் விரைவில் அங்கிருந்து வெளியேற்றப்படுமென ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஈரானிய மாணவர்களுடனான இணைய வழி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘ஈராக், சிரியா என்ற இரண்டு அரபு நாடுகளில் அமெரிக்கப் படைகள் இருப்பது சட்டவிரோதமாகும். நிச்சயமாக ஈராக், சிரியாவில் அமெரிக்கர்கள் இருக்கப் போவதில்லை, இவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
ஏனெனில் அமெரிக்கர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றனர். பிராந்திய தேசங்கள் அமெரிக்கர்களை வெறுக்கின்றனர். ஈரானின் தீமையனான எதிரி அமெரிக்காதான்’ என கூறினார்.
சிரியாவில் தற்போது 200 அமெரிக்க படைகள் உள்ளன. ஈராக்கில் 1 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கப் படைகள் உள்ளன.
வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூறி அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அத்தோடு, எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.
உலக நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு ஈரான் கைச்சாத்திட்ட சவுத் பார்ஸ் கள ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகியதையடுத்து பொருளாதார விபத்து எனக் கூறப்படும் வணிக இறுக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையில், அண்மையில் ஈரான் இராணுவ தளபதியை அமெரிக்கா கொன்றதையடுத்து, இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அத்துடன் ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது.
பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ஈரான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.