ஒபாமா முற்றிலும் திறமையற்றவர் - டிரம்ப் விமர்சனம்
19 May,2020
கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று மதிய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 28 ஆயிரத்தை கடந்திருந்தது. அதே போல் கொரோனா பலி எண்ணிக்கை 90 ஆயிரத்து 980 ஆக இருந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், கொரோனா தடுப்பில் டிரம்பின் செயல்பாடுகளை குறைகூறி வருகிறார்.
அண்மையில் கல்லூரி பட்டதாரிகளுடன் காணொலி மூலம் உரையாடிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, கொரோனா வைரஸ் அமெரிக்கா தலைமையின் நிர்வாகத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதாக தெரிவித்திருந்தார். அத்துடன் இங்கு கொரோனா தொற்றை தவிர எதுவும் இல்லை என்றும், அதிகாரிகள் எல்லாரும் என்ன செய்கிறார்கள் என்பதை கொரோனா வந்து காட்டிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது ஒபாமாவின் விமர்சனம் குறித்து, டிரம்பிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய டிரம்ப், “ஒபாமா ஒரு திறமையற்ற ஜனாதிபதியாக இருந்தார். முற்றிலும் திறமையற்றவர். அவ்வளவு தான் சொல்வதற்கு வேறில்லை” என கூறினார்