உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன...? 62 நாடுகள் கேள்வி
18 May,2020
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் லடசக்கணக்கானவர்களை பலி கொண்டுள்ளது. சீனா உகான் நகரில் தோன்றிய கொரொனா வைரசுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிப்பு விவரங்களை மறைத்து உள்ளது என உலக நாடுகள் சீனாவை குற்றம் சாட்டி வந்தன. ஆனால் உலக சுகாதார அமைப்பு சீனா சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்து உள்ளது என பாராட்டியது.
இதனால் அமெரிக்கா உலகசுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தியது. ஆனால் சீனா உலக சுகாதாரா அமைப்புக்கு மேலதிக நிதி வழங்கியது
இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்த உலக சுகாதார சட்டமன்றத்தில் வரைவுத் தீர்மானம் கொடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் நடவடிக்கை குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக 73 வது உலக சுகாதார சட்டமன்றத்திற்கு (WHA) முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உட்பட 62 நாடுகள் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கூட்டு முயற்சியை ஆதரித்து உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் தொடர்பான அவற்றின் காலக்கெடு பற்றிய விசாரணையைத் தவிர, கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்து பக்கச்சார்பற்ற, சுயாதீனமான மற்றும் விரிவான விசாரணைக்கு இந்த வரைவு அழைப்பு விடுத்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த சர்வதேச சுகாதார நடவடிக்கையில் இருந்து பெற்ற அனுபவங்களையும், கற்றுக்கொண்ட பாடங்களையும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
கடந்த மாதம், கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்து சுயாதீன விசாரணைக்கு அழைப்பு விடுத்த முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும்
ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு வரைவில் பெயரிடப்பட்ட பிற முக்கிய நாடுகளில் ஜப்பான், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் கொரியா, பிரேசில் மற்றும் கனடா ஆகியவை அடங்கும்.