சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: ரஷ்யா
16 May,2020
கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது.
உலகையே உலுக்கும் கொரோனா வைரஸ் தொற்றை சீன ஆய்வகத்தில் இருந்து வேண்டுமென்றே பரப்பப்பட்டதாகவும், சீனா நினைத்திருந்தால் வைரஸ் தொற்றை மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்திருக்கலாம் எனவும் அமெரிக்கா தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதனை சீனா மறுத்தாலும், தங்களிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், மேலும் ஆதாரங்களை திரட்டி, சீனா மீது விசாரணை தொடங்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தார்.
இந்நிலையில், ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியதாவது: கொரோனா குறித்து சீனா மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. கொரோனா விவகாரத்தில் சீனா, தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. அமெரிக்க அரசியல்வாதிகள், தினமும் ஏதேனும் ஒரு குற்றச்சாட்டு பட்டியலை எடுத்துக் கொண்டு சீனாவை குறை கூறுகின்றனர். இதனை ரஷ்யா, கவலையுடன் கவனித்து வருகிறது. சர்வதேச நாடுகளிடையே, சீனாவுக்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.