அவுஸ்ரேலியாவின் பிரதான மாகாணத்தில் உணவு- தேனீர் விடுதிகள் திறப்பு!
15 May,2020
அவுஸ்ரேலியாவின் பிரதான மாகாணங்களில் ஒன்றான நியூ சௌத்வேல்ஸ் மாகாணத்தில் உணவு விடுதிகள் மற்றும் தேனீர் விடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
மாகாணத்தின் முதல்வர் க்ளாடி பெர்ஜிகிலான் கடந்த 10ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்புக்கு அமைய இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உணவு விடுதிகள் மற்றும் தேனீர் விடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.
அதேபோல், உணவுகளுக்கு பப்களும் திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், மதுபான விடுதிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
தொற்று பரவல் தடுப்பு கட்டுப்பாட்டினை தளர்த்தும் ஒரு பகுதியாக, உணவு விடுதிகள் மற்றும் தேனீர் விடுதிகள் ஆகியன திறக்கப்பட்டாலும், சில விதிகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டுமென மாகாண அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பாக உணவு விடுதிகள் மற்றும் தேனீர் விடுதிகளில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி, ஒரு மீற்றர் இடைவெளி, உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்றான அவுஸ்ரேலியாவில், இதுவரை வைரஸ் தொற்றுக்கு 7,019பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 6,334 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 587 சிகிச்சை பெற்று வருகின்றனர். 98பேர் உயிரிழந்துள்ளனர்.