இஸ்ரேலில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது: பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமரானார்
15 May,2020
இஸ்ரேலில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றி பெற்றபோதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 2-வது முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனவே எதிர்க்கட்சியுடன் சேர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தை நிறுவ பெஞ்சமின் நேட்டன்யாஹூ முடிவு செய்தார். இதற்காக புளு அண்ட் ஒயிட் கட்சியின் தலைவரும், முன்னாள் ராணுவ தளபதியுமான பென்னிட் கான்ட்சுடன் பெஞ்சமின் நேட்டன்யாஹூ பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் ஒற்றுமை அரசில் யார் பிரதமராக இருப்பது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே 3-வது முறையாக கடந்த மார்ச் மாதம் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆனால் இதிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் இல்லையேல் 4-வது முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்கிற சூழல் உருவானது. இதற்கிடையில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்க ஒரு நிலையான அரசை நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதையடுத்து, பெஞ்சமின் நேட்டன்யாஹூவும் பென்னிட் கான்ட்சும் ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தினர். இதில் இருவருக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான அரசு நேற்று பொறுப்பேற்றது. பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இதன் மூலம் இஸ்ரேல் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.