கொவிட்-19 தொற்றால் உள்ளாகுபவர்களைக் கண்காணிக்க 4,000 சுகாதாரப் பணியாளர்களை ஈடுபடுத்தும் பிரான்ஸ்!
12 May,2020
பிரான்ஸில் புதிதாகத் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிற்கு உள்ளாகுபவர்களைக் கண்காணிக்கும் பணியில் 4,000 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நடைமுறையில் இருந்த முடக்கநிலை முடிவிற்கு வந்துள்ள நிலையில், இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் தொற்று பரவலை குறைக்கலாம் என அரசாங்கம் கருதுகின்றது.
தேசிய மருத்துவக் காப்பீட்டின் ஊழியர்களான இவர்கள், புதிதாகத் தொற்றிற்கு உள்ளாகுபவர்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் இருந்தால், உங்களிற்கான மருத்துவருடன் நீங்கள் தொடர்பை ஏற்படுத்தும் போது, அல்லது நேரில் சென்று பார்க்கும் போது, உங்கள் நோய் அறிகுறிகள் கொரோனாத் தொற்று எனச் சந்தேகிக்கப்பட்டால், உங்களின் தொலைபேசித் தொடர்பை, இந்தச் சுகாதாரப் படையணிக்கு வழங்குவார்கள்.
இதன் மூலம், இவர்கள் உங்களுடன் காலை 8 மணியிலிருந்து, மாலை 7 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களின் தனிமைப்படுத்தலை உறுதி செய்வார்கள். வீட்டில் தனிமைப்படுத்தப்படுதல் சாத்தியம் இல்லையென்றால், அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ள விடுதிகளில் உங்களிற்கான தனிமைப்படுத்தல் ஒழுங்கு செய்யப்பட்டு, உங்களிற்கான உணவு முதற்கொண்டு அனைத்து விடயங்களும் ஒழுங்கு செய்யப்படும்.
இந்த அணியில் உள்ள மருத்துவத் தாதியினர், உங்களிற்கான தொடர் கண்காணிப்பைத் தொலைபேசி மூலம் மேற்கொள்வார்கள். உடல் நிலை மோசமடைந்தால், உடனடியாக உங்களை வைத்தியசாலை பொறுப்பேற்கும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.
இது தவிர, 150 இலிருந்து 200 வரையான பணியாளர்கள், மருத்துவர்களாகவும், தொற்றியல் நிபுணர்களாகவும் தயார் நிலையில் உள்ளனர். தொற்றுப் பரவல் நிலைமை மோசமாகினால் இவர்கள் உடனடியாகக் களமிறங்குவார்கள்.