கொரோனா பாதிப்பில் இத்தாலி, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது ரஷியா
12 May,2020
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2-ம் இடத்தில் ஸ்பெயினும் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து நாடுகள் இருந்தன.
இந்த நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது. கடந்த சில நாட்களாக, ரஷியாவில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 11,656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் மொத்த பாதிப்பு 2 லட்சத்து 21 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 39 ஆயிரத்து 801 பேர் மட்டுமே முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.