சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்தது
10 May,2020
உலக நாடுகளை ஒருசேர கொரோனா பாதிப்பு உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக உள்ள பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிங்கப்பூரில் ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இன்று ஒரே நாளில் மேலும் 876 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,336 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் வைரஸ் தொற்று இருந்தபோதிலும், வேறு காரணங்களால் இறந்துள்ளனர். வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் வெளிநாட்டு தொழிலாளர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி, சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.