ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸிலும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம்!
10 May,2020
ஜேர்மனியை தொடர்ந்து பிரான்ஸிலும் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) தளர்த்தப்படவுள்ளன.
இந்தநிலையில், நாளை முதல் பொதுப்போக்குவரத்துக்களில், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இதேபோல, பொதுப் போக்குவரத்துக்களைக் குறிப்பிட்ட நேர எல்லைக்குள் உபயோகிப்பதற்கு, வேலைத்தள அத்தாட்சிப் பத்திரம் கட்டாய நடைமுறையாக்கபட்டுள்ளது. இதனை பின்பற்றாதவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் 135 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இதேபோல, விமான பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே, அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என எயார் பிரான்ஸ் விமானநிறுவனம் தெரிவித்துள்ளது.
38ஊC இற்கு அதிகமான உடல் வெப்பநிலை இருக்கும் பயணிகளிற்கு விமானத்தினுள் பயணிக்கும் அனுமதி மறுக்கப்படும். இவர்கள் கொள்வனவு செய்த பயணச்சீட்டு, குறிப்பிட்ட காலத்தின் பின்னரான, வேறு ஒரு திகதிக்கு பயணியின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொடுக்கப்படும் என எயார் பிரான்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், திங்கட்கிழமையிலிருந்து, எயார் பிரான்ஸில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதும் மீள வலியுறுத்தப்பட்டுள்ளது.