சீனாவெற்றி .. கொரோனாவிற்கு விரைவில் தடுப்பூசி..
09 May,2020
கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் சீனா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. சீனாவில் ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெற்றிக்கு மிக அருகில் சென்றுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவை சேர்ந்த சினோவேக் பயோடெக் என்ற நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.
அந்த நிறுவனம் ஷுசோவ் தடுப்பூசியை உருவாக்கி, அதில் ஆராய்ச்சி செய்து வருகிறது. தனியார் நிறுவனமான இது அங்கு அரசு மூலம் தீவிரமாக ஆதரிக்கப்படும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் கொரோனா ஆராய்ச்சியில் வெற்றிக்கு விளிம்பில் உள்ளது.
இந்த நிறுவனம் தங்கள் ஆராய்ச்சி குறித்து கூறும் போது,
“பொதுவாக தடுப்பூசிகளை கண்டுபிடிக்க 10 வருடம் ஆகும். ஆனால் தற்போது பரவும் கொரோனா வைரசுக்கு வேகமாக தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும்.
அதனால் வேகமாக நாங்கள் உழைக்கிறோம். விரைவில் மருந்து கண்டுபிடிப்போம். இதற்காக பெரிய அளவில் நாங்கள் ஆராய்ச்சி குழுக்களை உருவாக்கி உள்ளோம்,” என்று கூறியுள்ளது.
கொரோனா வைரஸின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், அதை வளரும் திறன், இனப்பெருக்க திறனை காலி செய்யும் வகையில் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்த நிறுவனம் இறங்கி உள்ளது.
அதேபோல் சினோவேக் பயோடெக் என்ற நிறுவனம் சீனாவின் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் & பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரி உடன் இணைந்து பிகோவேக் (PiCoVacc) என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. இதை எலிகள், பன்றிகள் மீது சோதனை செய்து வெற்றி கண்டனர்.
அதேபோல் இன்னொரு பக்கம் குரங்கிடமும் இதை சோதனை செய்தனர். அதில் குரங்கு கொரோனா தாக்குதலில் இருந்து தப்பித்தது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. குரங்கிடம் இந்த சோதனை வெற்றிபெற்றதால் விரைவில் மனிதர்களிடம் இந்த சோதனையை செய்ய முடிவு செய்துள்ளனர். அந்த சோதனையில் வெற்றிகிடைத்தால் விரைவில் இந்த மருந்து அமலுக்கு வரும் என்று கூறுகிறார்கள்.
இப்படி மருந்துகண்டுபிடித்தால் உலகம் முழுக்க தங்களின் மதிப்பு உயரும் என்று சீனா நினைக்கிறது. உலகிற்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்தால் கொரோனாவால் ஏற்பட்ட கறை போகும் என்று சீனா நினைக்கிறது. முக்கியமாக அமெரிக்காவின் புகார்களை சமாளிக்க மருந்து ஒன்று மட்டுமே ஒரே வழியாக இருக்கும் என்று சீனா தீவிரமாக நம்புகிறது.