அர்ஜென்டினாவில் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் நீடிப்பு
09 May,2020
அர்ஜென்டினா தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமூக தடுப்பு மற்றும் கட்டாய தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை, எதிர்வரும் மே 24ஆம் திகதி வரை நீடிப்பதாக, அர்ஜென்டினா ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அறிவித்துள்ளார்.
ஆனால், நாட்டின் பிற இடங்களில் கொரோனா வைரஸின் பரவலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட கட்டுப்பாடுகளை தளர்த்தினார்.
தொலைக்காட்சி உரையில் இந்த அறிவிப்பினை வெளியிட்ட ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ், இந்த முடக்கம் தலைநகரத்திலும் அதன் புறநகரிலும் இருக்கும் என தெரிவித்தார்.
அத்துடன், கடுமையான சமூக தனிமை நடவடிக்கைகளை பின்பற்றியதற்காக. அர்ஜென்டினாவை எண்ணி மிகவும் பெருமைப்படுவதாகவும் பெர்னாண்டஸ் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, அர்ஜென்டினாவில் கடந்த மார்ச் 20ஆம் திகதி நாடு முழுவதும் கட்டாய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்பிறகு எதிர்வரும் மே 10ஆம் திகதி வரை நீடிப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுவீதம் குறையாததால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வரவிருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரை 5,611பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, 293பேர் உயிரிழந்துள்ளனர். 1,659பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதனை அர்ஜென்டினாவின் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.