சீனாவை அமெரிக்கா சந்தேகிப்பது தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை: ஜேர்மனி சந்தேகம்
08 May,2020
சீன ஆய்வுக்கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அமெரிக்கா சந்தேகப்படுவதானது, கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தனது தோல்வியை திசை திருப்பும் நடவடிக்கை என ஜேர்மனி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
வுஹான் நகரின் ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகத்துக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை சீனாவின் தலையீட்டுடன் கொரோனா வைரஸ் பரவியிருந்தால் பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
இந்நிலையில் அமெரிக்காவின் குறித்த கருத்து தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதாக ஜேர்மனியின் புலனாய்வு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டமையினை திசை திருப்ப இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றனவோ என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் வாராந்த செய்தித்தாளான டெர் ஸ்பீஜெல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த புலனாய்வு அறிக்கையானது ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அதேவேளை குறித்த அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சொந்த தோல்வியினை மறைப்பதற்காகவே இவ்வாறான குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக வெளிப்படையாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது ஏறக்குறைய உலகின் 200 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
குறித்த வைரஸ் பரவலின் தாக்கத்தால் அமெரிக்கா பல பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதோடு, டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கம் குறித்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தவறி விட்டது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.