உலக அளவில் ஆப்கனில் கொரோனா பாதிப்பு அதிகம்?
07 May,2020
'உலக அளவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மற்ற நாடுகளை விட, ஆப்கானிஸ்தானில் அதிகமாக இருக்கலாம்' என, குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப் கூறியதாவது: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 3,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 104 பேர் பலியாகி உள்ளனர். தலைநகர் காபூலில், 500 பேரிடம் செய்யப்பட்ட மாதிரி சோதனையில், 50 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம், ஆப்கனின், 3.50 கோடி மக்கள் தொகையில், 80 சதவீதம் பேருக்கு தொற்று இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அங்கு, உள்நாட்டுப் போர் நிலவரம் காரணமாக, நாட்டின் 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில், பரிசோதனை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆப்கனில், எட்டு பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு நாளில், 100 முதல், 150 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, அங்கு போதிய வசதிகள் இல்லை.
தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற நடைமுறைகள் அங்கு சாத்தியப்படுவதில்லை. அங்கு ஒரு குடும்பத்தில் சராசரியாக ஏழு பேர் இருக்கின்றனர். அவர்கள், சிறிய அறைகளில் வசிக்கின்றனர். சில தினங்களுக்கு மேல், அவர்களால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க முடிவதில்லை. அவர்களின் சமூக பொருளாதார நிலை, அதற்கு இடமளிப்பதில்லை. இதன் காரணமாக, உலக அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அதிகம் உள்ள நாடாக ஆப்கானிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.