அமெரிக்கா சொன்னால், ஆக்கிரமிக்கத் தயார்!
06 May,2020
கொரோனா நெருக்கடியில் இஸ்ரேலின் சமீபத்திய முடிவு மத்திய கிழக்கில் புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
கொரோனா நெருக்கடி இன்று உலகையே புரட்டிப்போட்டிருக்கிறது. அசாத்தியம் எனக் கருதப்பட்ட ஒரு வாழ்க்கை முறை சாத்தியப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் பல எதிர்மறையான நடவடிக்கைகளையும் உலகம் எதிர்கொண்டு தான் வருகிறது.
கொரோனா நெருக்கடியைக் காரணம் காட்டி அரசாங்கங்கள் தங்களிடம் அதிகாரங்களைக் குவித்துக்கொள்வதும் மக்கள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்துவதும் பல நாடுகளில் அரங்கேறி வருகின்றன. அதையேதான் தற்போது இஸ்ரேலும் செய்யத் துணிந்துள்ளது.
இஸ்ரேல்
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீன பகுதிகளை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரபூர்வமாக தன்னுடன் இணைத்துக் கொள்ளப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
பதற்றங்களுக்குப் பஞ்சமில்லாத மத்திய கிழக்கில் இது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐரோப்பிய நாடுகள் இதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளன. இஸ்ரேலுக்கு அமைதியாக இசைவு கொடுத்து மௌனம் காத்து வருகிறது அமெரிக்கா. அமெரிக்கா முன்மொழியும் எதையுமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனத் திட்டவட்டமாக இருக்கிறது பாலஸ்தீன்.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையேயான சிக்கல் ஒரு நூற்றாண்டைக் கடந்தும் எரிதழலாக எரிந்து கொண்டிருக்கும் ஒன்று.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளின் காலனிகள் ஒவ்வொன்றாக விடுதலை பெற்று வந்தன. அவ்வாறே மத்திய கிழக்கில் யூதர்களுக்கு இஸ்ரேல், அரேபியர்களுக்கு பாலஸ்தீன் என இரண்டு தேசங்கள் உருவாக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. ஐ.நா ஒப்புதலுடன் இரண்டு நாடுகளுக்கான எல்லைகளும் வரையறுக்கப்பட்டன.
தொடர் யுத்தங்களுக்குப் பிறகு 1967-ல் பாலஸ்தீன் மீது இஸ்ரேல் மீண்டும் படையெடுத்தது. இந்த யுத்தத்துக்குப் பிறகு பாலஸ்தீனின் பெரும்பாலான பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ளது.
தற்போது வரை அவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகின்றன. இஸ்ரேல் – பாலஸ்தீன் அமைதிப் பேச்சுகள் தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லாமல் நடைபெற்று வருகின்றன.
ஐ.நா வரைபடம்
மேற்கு கரை, காஸா, ஜோர்டான் பள்ளத்தாக்கு என பாலஸ்தீன் பிரதேசங்களாகப் பிரிந்துள்ளன. இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் யூதர்களுக்கான சிறப்பு குடியிருப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
இந்தக் குடியிருப்புகள் சட்டவிரோதமானது என்றும் இதை உடனடியாக நிறுத்துவதற்கு உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
அதையும் மீறித்தான் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பை மேற்கொள்வதில் உறுதியாக இருக்கிறது. காரணம், அமெரிக்காவின் ஏகபோகமான ஆதரவு. அமெரிக்கா அதிக அளவில் ராணுவ உதவி வழங்கும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இஸ்ரேலுக்குப் பாதகமாக ஐ.நா-வில் வருகிற தீர்மானங்களையும் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தொடர்ந்து தன்னுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து வருகிறது.
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க அதிபரானதும் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் அணுகுமுறை மாறியது. ஐ.நா-வின் அமைப்புகளிலிருந்து தன்னிச்சையாக அமெரிக்காவை விலக வைத்தார்.
ஐரோப்பாவைத் தொடர்ந்து பகைத்து வருகிறார். இரான் உடன் அதிகரிக்கும் மோதல் போக்கு, சீனாவுடனான வர்த்தகப் போட்டி, சவுதி அரேபியா, இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவு என ட்ரம்ப்பின் சர்ச்சை சகாப்தங்களுக்குப் பஞ்சமில்லை.
ட்ரம்ப் வெளியிட்ட வரைபடம்
இஸ்ரேல் – பாலஸ்தீன் சிக்கலிலும் ட்ரம்ப்பின் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளானது. புனித நகரமான ஜெருசலேம் மீது இஸ்ரேல், பாலஸ்தீன் என இரண்டு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்க தூதகரத்தை டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு கடந்த 2017-ம் ஆண்டு மாற்றினார் ட்ரம்ப்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிதியத்துக்கு அமெரிக்கா அளித்து வந்த பங்களிப்பையும் ரத்து செய்தார். கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல் – பாலஸ்தீன சிக்கலுக்கு தீர்வு காண அமைதி ஒப்பந்தம் (Trump Peace Plan) என்கிற ஒன்றை முன்மொழிந்தார். அதை இந்த நூற்றாண்டுக்கான ஒப்பந்தம் (deal of the century) என அவரே பிரகடனப்படுத்திக் கொண்டார். அதன்படி இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பகுதிகளும், ஜெருசலேம் நகரும் இஸ்ரேலுக்கே சொந்தமானது என அறிவித்தார்.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்காவுடன் உரையாடப்போவதில்லை என்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவை இனியும் நம்ப முடியாது என வெளிப்படையாக அறிவித்துள்ளது பாலஸ்தீன். இவற்றுக்கு மத்தியில்தான் இஸ்ரேலின் புதிய அறிவிப்பு வந்துள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை, “இஸ்ரேலின் எந்தவொரு நடவடிக்கைகளும் ட்ரம்ப் முன்மொழிந்த திட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இது இஸ்ரேலின் விவகாரம்” என மேம்போக்காக பதிலளித்துள்ளது. இஸ்ரேலின் திட்டத்துக்கு அமெரிக்கா மறைமுகமாக ஆமோதித்துள்ளதாகவே சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.