இத்தாலியில் இரண்டு மாதங்கள் நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது!
04 May,2020
கொரோனா வைரஸ் பரவலால் ஆரம்பத்தில் சீனா பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் இத்தாலி அதிகளவில் பாதிப்புக்குள்ளானது. இதனால் அங்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகி வந்தன.
இதனை தொடர்ந்து இத்தாலியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அங்கு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, நாடு முழுவதும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அங்கு கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்தது. அதனடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) முதல் இத்தாலியில் ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏறக்குறைய, 405 மில்லியன் மக்கள் இரண்டு மாத முடக்கத்துக்கு பின்னர் மீண்டும் வேலைகளுக்கு திரும்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், கடந்த இரண்டு மாத காலங்கள் பிரிந்திருந்த குடும்பங்கள் மீள இணைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் வழி செய்துள்ளது.
இத்தாலிய நகர வீதிகளில் தற்போது கார்கள் மற்றும் பேருந்துகள் உட்பட்ட வாகனங்கள் பயணிப்பதை அவதானிக்க முடிந்தாலும், கடந்த பெப்ரவரி மாதத்திற்கு முதல் காணப்பட்ட வாகன நெரிசலை காட்டிலும் குறைவான வாகனங்களே வீதிகளில் செல்கின்றன.
மேலும், அந்நாட்டின் தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள போதும் அவை பகுதியளவிலேயே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இத்தாலியின் பொழுது போக்கு பூங்காக்கள் திறக்கப்பட்டு அவற்றில் சிறுவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நண்பர்களுடனான களியாட்டங்கள் உட்பட்ட நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி வரை அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மதுபான சாலைகள் மற்றும் உணவகங்களில் பொருட்கள் மற்றும் பானங்களை வாங்கி செல்ல மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் இதுவரையான காலப்பகுதியில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 700இற்க்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 28 ஆயிரத்து 800இற்க்கும் அதிகளவானவர்கள் குறித்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.