அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: கிம் ஜாங்-உன் மீண்டும் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது
03 May,2020
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நல்ல உடல்நலத்துடன் திரும்ப வந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
உர தொழிற்சாலையின் தொடக்க விழாவில் கிம் ஜாங்-உன் கலந்து கொண்ட பிறகு, "அவர் நலமுடம் திரும்பியதில் தனக்கு மகிழ்ச்சி" என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் அதிபர் டொனால்டு டிரம்ப்.
மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முதலாக பொதுப்பார்வைக்கு இப்போது தான் வருகிறார் கிம் ஜாங்-உன்.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.
இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை.
கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.
இப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.
கிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.
ஆனால், தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்தனர்.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமையன்று உரத் தொழிற்சாலையை கிம் துவங்கி வைத்தார் எனவும் அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர் என கேஎன்சிஏ செய்தி முகமை தகவல் வெளியிட்டது.
நலமாக இருக்க வேண்டும்
பல வதந்திகள் மற்று பரபரப்பிற்கிடையே திங்கள்கிழமையன்று அதிபர் டிரம்ப்., கிம் ஜாங்-உன்னின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவே தான் கருதுவதாகக் கூறியிருந்தார். ஆனால் அதை பற்றி எதுவும் பேச முடியாது எனவும் கூறியிருந்தார். மேலும் அவர் நலமாக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம்முக்கு இடையே கடந்த சில வருடங்களாக ஒரு வித்தியாசமான உறவு இருந்து வருகிறது.
2018லிருந்து இருவரும் மூன்று முறை சந்தித்து விட்டனர். பல தனிப்பட்ட கடிதங்கள் ஒருவொருக்கொருவர் அனுப்பி கொண்டனர். அதிபர் டிரம்ப் , கிம்மின் கடிதங்களை அற்புதமானது எனவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அணு ஆயுதங்கள் தயாரிப்பு நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.