அமெரிக்காவில் கொரோனாவால் உயரும் பலி எண்ணிக்கை: குளிர் சாதனப்பெட்டி பழுதால் அழுகும் உடல்கள்
03 May,2020
சீனாவின் உகான் நகரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ், இன்று உலகையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 2.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 34 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கின்றனர். இதற்கிடையே இந்த வைரஸ் இன்னும் எத்தனை காலம் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை பாதிப்படையச் செய்யும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரசின் தொற்று மையமாக நியூயார்க் மாகாணம் பார்க்கப்படுகிறது. அங்குதான் அமெரிக்காவில் அதிகபட்ச எண்ணிக்கையிலானவர்களை இந்த வைரஸ் தாக்கியது. பிற இடங்களை விட இங்குதான் உயிர்ச்சேதமும் அதிகளவில் ஏற்பட்டது. நியூயார்க் நகரில் மட்டும் மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 23 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 11 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 67 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்து வருகின்றனர்.
இந்நிலையில், நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் இடத்தில் நான்கு பெரிய டிரக்குகளில் அழுகிய நிலையில் கிடந்த மனித உடல்களைச் சுமந்து நின்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு நாட்களாக அந்த டிரக்குகள் நின்றிருந்த நிலையில், அதிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த டிரக்குகளில் 12க்கும் மேற்பட்ட மனித உடல்கள் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் குளிர்சாதனப் பெட்டிகளை பயன்படுத்தி பாதுகாத்து வருவதாகவும், குளிர்சாதனம் பெட்டி செயலிழந்ததால் உடல்கள் அழுகியதாகவும் கூறப்படுகிறது.
நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ கூறுகையில், நியூயார்க்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே செல்வதால் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றார். நியூயார்க்கில் தகவலின்படி புதிய இறப்புகள் 299 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.