சீனா மீது புதிய வரிகள் : அமெரிக்கா அதிரடி முடிவு
02 May,2020
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகின் பிற எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 10த லட்சம் பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளது. 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் அமெரிக்க பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டிரம்ப் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஒரு நிருபர், “கொரோனா வைரசுக்கு தண்டனையாக அமெரிக்கா தனது கடன் கடமைகளை சீனாவுக்கு செலுத்தக்கூடாது என்று கருதுகிறதா?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு டிரம்ப் பதில் அளிக்கையில், “கடன்ரத்து என்பது ஒரு கடினமான விளையாட்டு. இது அமெரிக்காவின் புனிதத்தன்மைக்கு கேடு விளைவிப்பதாக அமைந்து விடும். நாம் அவர்களுக்கு வரி விதிப்பதின் மூலம் இழப்பை சரி செய்யலாம். அதைத் தாண்டி வேறு வழிகளிலும்கூட செய்ய முடியும். அமெரிக்க கடன் கடமைகளை ரத்து செய்வது என்பது கடினமான விளையாட்டு” என பதில் அளித்தார்.
இது சீனா மீது அமெரிக்கா புதிய வரி விதிக்கும் முடிவை காட்டுவதாக அமைந்துள்ளது.
அமெரிக்காவின் கூட்டாளிகளான ஜெர்மனி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு சீனாவிடம் இழப்பீடு கோரும் வழிகள் ஆராயப்படுவது பற்றியும் டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “நான் அதை வித்தியாசமாக செய்வேன். அதை விட கூடுதலாக பணத்தை வரி விதிப்பின்மூலம் செய்யலாம். 1 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.75 லட்சம் கோடி) அளவில் அதை செய்ய முடியும். ஆனால் அதை நாம் இன்னும் கொஞ்சம் நேர்மையான முறையில் செய்யலாம். கடன் ரத்து என்பது கடினம்.
நம்மை பாதுகாக்க டாலர் உள்ளது. அதுதான் உலகிலேயே மிகப்பெரிய பணம். அது வலுவடைந்துள்ளது. நம்மிடம் வலுவான டாலர் இருக்கிறது” என பதில் அளித்தார்.