சீனாவை பழி சொல்ல எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை – அவுஸ்ரேலியா பின்வாங்கல்
01 May,2020
கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவியதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லையென அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வுஹான் நகரில் இருந்து பரவியிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படும் நிலையில், இது குறித்த ஆய்வுகளில் உடனடியாக மேற்கொள்ளுமாறு துறை சார் நிர்வாகிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சீனாவின் தலையீட்டுடன் குறித்த வைரஸ் பரப்பப்பட்டிருந்தால் அதற்க்கான விலையினை சீனா கொடுக்க வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை கொரோனா வைர பரவல் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனும் அமெரிக்காவின் தீர்மானத்துக்கு அவுஸ்ரேலியா தனது ஆதரவினை வழங்கியது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் நகர ஆய்வுக்கூடங்களில் இருந்து பரவியதாக கூறுவதற்கான எந்த ஆதாரமும் தம்மிடம் இல்லையென அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
குறித்த வைரஸ் வுஹான் நகர பரிசோதனைக்கூடங்களில் இருந்து பரவியிருக்கலாம் என தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்த கருத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பதிலளித்துள்ள அவர், குறித்த விளக்கத்துக்கு ஆதரவளிப்பதற்கான எந்த ஆதாரமும் அவுஸ்ரேலியாவிடம் இல்லை எனவும் தமது அரசாங்கம் வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தமை குறித்த வைரஸ் பரவலுக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காகவே என தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் இதுவரையான காலப்பகுதியில் 6,766 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், 93 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.