அதிபர் தேர்தலில் தன்னை தோற்கடிக்க சீனா என்ன வேண்டுமானாலும் செய்யும்... டிரம்ப் குற்றச்சாட்டு!
30 Apr,2020
அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்கு, சீனா எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில், சீனா மீது தனது அரசு பல்வேறு வர்த்தக நிபந்தனைகளை விதித்திருப்பதால், இந்தாண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில், தான் தோற்க வேண்டும் என்று சீனா முனைந்து வருவதாக குறிப்பிட்டார்.
தன்னை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனை வெற்றிபெற வைத்தால், சீனாவுக்கு ஆதரவான வர்த்தக சூழல் ஏற்படும் என்று அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதற்கு சீனா அரசாங்கமே காரணம் என்று சாடியுள்ள டிரம்ப், இதுகுறித்து முன்கூட்டியே உலக நாடுகளுக்கு சீனா அறிவித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்கு, சீனா என்ன வேண்டுமானாலும் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் டிரம்ப் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 60,000 கடந்தபோதிலும், தனிமனித இடைவெளி வழிகாட்டுதல்களை அமெரிக்க அரசு மேலும் நீட்டிக்காது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.