ஒருவருக்கு தான் கொரோனா... அவரும் குணமடைந்தார் - வைரஸ் இல்லாத நாடாக மாறிய ஏமன்
29 Apr,2020
ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. இந்நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி இன மக்கள் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த சண்டையில் ஏமன் அரசுப்படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது.
இதற்கிடையே, உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஈரானிலும் பரவியது. உள்நாட்டு போரால் அதிக பாதிப்புகளை சந்தித்த ஏமனில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் வைரஸ் பரவல் அதிகரித்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தலாம் என அச்சம் எழுந்தது.
அந்நாட்டில் ஹட்ராமொண்ட் மாகாணம் அஷ் ஷஹூர் நகரை சேர்ந்த 60 வயது நிரம்பிய அரசு அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் கடந்த 10-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், வைரஸ் பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மருத்துவத்துறையினர் முற்பட்டனர்.
ஆனால், அந்த குடும்பத்தினர் யாரும் வைரஸ் பரிசோதனை செய்ய முன்வரவில்லை. இதனால், அவர்கள் அனைவரும் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும், வைரஸ் உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் யாருக்கும் வைரஸ் தொற்று பரவவில்லை. இதனால் ஒட்டுமொத்த ஏமனிலும் அந்த ஒரு அரசு அதிகாரிக்கு மட்டுமே கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அந்த அரசு அதிகாரி நேற்று குணமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மேலும், வைரசில் இருந்து குணமான நபரின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு 21 நாட்களும் முடிவடைந்தது.
இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து ஏமன் மீண்டு வந்துவிட்டதாக அந்நாடு அதிகாரிகள் தெரிவித்தபோதும் 3 கோடி மக்கள் தொகையை கொண்ட நாட்டில் ஒட்டுமொத்தமாக 120 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் இந்த தகவலின் உறுதித்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.